ஸ்ரீராமானுஜர் வாழ்கை வரலாறு சித்திர வடிவில்

இளையாழ்வார் எனப் போற்றப்படும் ஸ்ரீ இராமாநுஜர் திருவவதாரம் செய்து, இருபத்தி ஒன்றாம் நாளில் தொட்டிலில் தாலாட்டப்படும் திருநாள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகை அருளாலும் ஞானத்தாலும் உய்விக்க வந்த பரமாசார்யரின் தெய்வீக அவதாரத்தை நினைவு கூரும் புனித நாள் ஆகும். குழந்தை வடிவில் இருந்தபோதும், எதிர்காலத்தில் வைணவ சமயத்தை ஒளிவிளக்காய் உயர்த்தவிருக்கும் மகானின் திருப்பிறப்பு, அன்றே லோகக்ஷேமத்திற்கான நல்வாக்குறுதியாகக் கருதப்படுகிறது.

இளையாழ்வான் சிறுவயதிலேயே நல்ல பழக்கங்கள் கொண்ட குழந்தையாக வளர்ந்தார். அவரது தந்தை ஆசூரி கேசவர், அவருக்கு தேவையான கல்வி மற்றும் நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.
வேதங்களை கற்றுக்கொண்ட பிறகு, இளையாழ்வான் மேலும் அறிவு பெற வேண்டும் என்று நினைத்தார்.
அதனால், காஞ்சிக்கு அருகே உள்ள திருப்புட்குழி என்ற ஊருக்கு சென்று, புகழ்பெற்ற ஆசான் யாதவப் பிரகாசர் அவர்களிடம் வேதாந்தம் கற்கச் சென்றார்.
இராமாநுஜரின் அழகும், புத்திசாலித்தனமும், இனிய பேச்சும் ஆசானை மிகவும் கவர்ந்தது.
இராமாநுஜரின் சிற்றன்னை பெயர் ஸ்ரீதேவி. அவர் திருமலை நம்பியின் இன்னொரு சகோதரி.
ஸ்ரீ பெரும்பூதூருக்கு அருகில் உள்ள மங்கலத்து என்ற ஊரில், கமல நயன பட்டருக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் கோவிந்தன்.
கோவிந்தன், இராமாநுஜருக்கு இளையவன்.
கோவிந்தனும், இராமாநுஜரைப் போலவே, ஆசான் யாதவப் பிரகாசர் அவர்களிடம் தத்துவம் கற்க குருகுலத்தில் சேர்ந்தான்.

இந்நிலையில் காஞ்சிமன்னன் மகளுக்கு திடீரென நோய் கண்டது. வைத்தியத்திற்கு குணமாகாத வியாதிகளை மந்திரவாதிகளை அழைத்து பார்ப்பது நம்மவர் வழக்கம். காஞ்சி மன்னனும் அதற்கு விதிவிலக்கல்ல. மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற யாதவப் பிரகாசரை அழைத்து வர உத்தரவிட்டான். பிரகாசர் வந்தார். அப்பெண்ணின் உடலில் பிரம்மராட்சஷன் ஒருவன் இருப்பதைக் கண்டார். ஏ பிரம்மராட்சஷே! இப்பெண்ணின் உடலில் இருந்து மரியாதையாக ஓடிவிடு, என எச்சரித்தார்.அந்தப் பேய் அவரது எச்சரிக்கையை ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை.

யாதவப்ரகாசர் முன் ஜென்மம் பற்றி பிரம்மராட்சன் கூறியது.
நீர் போன ஜன்மத்தில் மதுராந்தகம் ஏரியில் ஒரு உடும்பாக இருந்தீர். அங்கு வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்ட மிச்சத்தை நீ உண்டதால் இந்த ஜன்மாவில் பிறவியைப் பெற்றீர்.

நானோ போன ஜன்மாவில், ப்ராஹ்மண ஸ்ரேஸ்ஷடனாக இருந்தேன். ஒரு யாகம் செய்யும் போது நேர்ந்த சிறிய தவரினால் இதுபோல் மாறிவிட்டேன். ஆகவே நீ போகச்சொன்னால் போகமாட்டேன். உன் சீடரான இராமாநுஜர் சொன்னால் போவேன் என்றது. “